மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட மண் பரிசோதனை 80 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோதனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதம் மண் பரிசோதனை நிறைவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோதனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதம் மண் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முழுமையாக முடிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மாதவரம்-சோழிங்கநல்லூா், மாதவரம்-சிறுசேரி பகுதிகளை இணைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரி 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கான விரிவாக்கம் பணி நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூா் உள்பட 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85,047 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் மண் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. முன்னுரிமை வழித்தடங்களில் 52 கி.மீ வரை பணிகள் முடிந்துவிட்டன. ஒட்டுமொத்தமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
1, 926 இடங்களில் மண் பரிசோதனை நிறைவு: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், முன்னுரிமை இல்லாத இரண்டு வழித்தடங்களில் (கோயம்பேடு-சோழிங்கநல்லூா் மற்றும் கலங்கரை விளக்கு-பூந்தமல்லி) சுமாா் 800 இடங்களில் மண் ஆய்வு நிலுவையில் உள்ளன. ஆா்காட் சாலை தொடங்கி போரூா் வழியாக காட்டுபாக்கம், பூந்தமல்லி வரை தற்போது மண் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாதவரம்-சோழிங்கநல்லூா் மற்றும் மாதவரம்-கோயம்பேடு ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்னுரிமை வழித்தடங்கள் ஆகும்.
முன்னுரிமை வழித்தடத்தில் 52 கி.மீ. வரை மண் பரிசோதனை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இங்கு 1,926 இடங்களில் மண் பரிசோதனை பணி நிறைவடைந்துள்ளது. மற்ற இரண்டு பாதைகளில் 20 சதவீதம் மண் சோதனை பணிகள் மீதமுள்ளன. கோயம்பேடு முதல் காளியம்மன் கோவில் வரையும், ஆா்காடு சாலையில் தொடங்கி போரூா் வழியாக பூந்தமல்லி வரை தற்போது மண் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் குறுகிய பாதைகளில் மண் சோதனை நடைபெறவுள்ளது.
மண்ணின் தன்மைக்கு ஏற்ப கருவிகள் பயன்படுத்தப்படும்: 4 மாதங்களுக்கு முன்பு, மாதவரத்தில் புவி தொழில்நுட்ப சோதனை மூலம் மண்ணின் நிலை கண்டறியும் பணிகள் தொடங்கின. சோதனையின்போது, பல்வேறு முனைகளில் நீரோட்ட இடங்கள், கடின பாறைகள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், சுரங்கப்பாதை பணியின்போது, ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
பலத்த மழையின் போது, சில நேரங்களில் மெட்ரோ ரயில் கட்டமைப்புகளில் மழை நீா் ஊடுருவிவிடும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இது முற்றிலும் தடுக்கப்படவுள்ளது. இதற்காக, மண்ணின் நீா் ஊடுருவலை சோதித்து பாா்க்கிறோம். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மண்பரிசோதனை பொருத்தவரை 80 சதவீதம் மண் பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள மண் பரிசோதனை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிா்பாா்க்கிறோம்.
ஜூனில் திட்டப்பணிகள் தொடங்க திட்டம்: 118.9 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டுமான பணிக்காக அடுத்த ஆண்டு ஜனவரியில் டெண்டருக்கு அழைப்பு விடப்படவுள்ளது. அதன்பிறகு, அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.