காவலரை கண்டித்து கால்டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல்
சென்னையில் காவலரைக் கண்டித்து கால்டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் காவலரைக் கண்டித்து கால்டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பள்ளிக்கரணைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (23). இவர் கால் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். ரஞ்சித் குமார் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை கைவேலி அருகே வந்தபோது, ரஞ்சித்குமார் காரை ஒரு மோட்டார் சைக்கிள் லேசாக உரசிவிட்டு நிற்காமல் சென்றது.
இதைப் பார்த்து கோபமடைந்த ரஞ்சித்குமார், அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்று மறித்து நிறுத்தினார்.
மேலும் காரை உரசிவிட்டு நிற்காமல் சென்றது குறித்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரிடம் ரஞ்சித்குமார் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், அவரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையே தகராறு முற்றவே அந்த நபர், ரஞ்சித்குமாரை தாக்கினராம். இதைப் பார்த்த அங்கு வந்த மற்றொரு கால்டாக்சி ஓட்டுநர் சாமுவேல், ரஞ்சித்குமாரை தாக்கிய நபரை கண்டித்தாராம். இதில் அந்த நபர், சாமுவேலையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சாலை மறியல் போராட்டம்: இந்நிலையில், இந்த மோதல் குறித்து தகவலறிந்த கால்டாக்சி ஓட்டுநர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், கால் டாக்சி ஓட்டுநர்களை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீஸார், கால்டாக்சி ஓட்டுநர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கால்டாக்சி ஓட்டுநர்கள் சமாதானமடையவில்லை.
மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில், கால்டாக்சி ஓட்டுநர்களை தாக்கிய நபர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் மகாவீர் என்பது தெரியவந்தது. போராட்டம் குறித்து தகவலறிந்த காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கால் டாக்சி ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக இணை ஆணையர் மகேஸ்வரி உறுதி அளித்த பின்னர், கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.