சென்னையில் கழிவுநீர் பிரச்னைகளால் பொதுமக்கள் அவதி: புதிய குழாய்கள் பதிக்கும் பணியில் கழிவுநீரகற்று வாரியம்
சென்னையில் கழிவுநீர் வழிந்தோடுதல், குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அதிக விட்டமுள்ள புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் ரூ.386 கோடியில் நடந்து வருகின்றன.
சென்னையில் கழிவுநீர் வழிந்தோடுதல், குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அதிக விட்டமுள்ள புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் ரூ.386 கோடியில் நடந்து வருகின்றன.
சென்னை மாநகரில் ராயப்பேட்டை, அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், ராயபுரம், காசிமேடு, தங்கசாலை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இருக்கும் குறுகிய வீதிகளில் அடிக்கடி கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோன்று மத்திய சென்னையில் புரசைவாக்கம் தாணா தெரு, டாக்டர் அழகப்பன் சாலை, திவான் ராமா தெரு உள்ளிட்ட பல்வேறு குறுகிய சாலைகளிலும், யானைகவுனி, மூலக்கொத்தளம், தங்கசாலை, பாரிமுனை, பிராட்வே, சூளை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்பு, தேக்கம் ஆகிய பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்தப் பிரச்னைகள் குறிப்பிட்ட காலத்தில் சரிசெய்யப்பட்டு வந்தாலும், அது தற்காலிக தீர்வாகவே அமைகிறது.
3,530 கிலோ மீட்டர் தொலைவுக்கு... சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சென்னையில் 3,530 கிலோ மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து தினமும் சராசரியாக 52 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகங்களுக்கு தினமும் சுமார் 100 புகார்கள் வருகின்றன. பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதால், அங்கிருந்து கழிவுநீர் பெருமளவு வெளியேறுகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் தரைக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால் அழுத்தம் காரணமாக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் நீடிக்கிறது.
தற்போது, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் சூப்பர் சக்கர் இயந்திரம் 54, சக்கர் மற்றும் ஜெட்ராடிங் வாகனங்கள் 30, ஜெட்ராடிங் 115, தூர்வாரும் இயந்திரங்கள் 244 ஆகியவை உள்ளன. கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மொத்த கொள்ளளவு 72 கோடி லிட்டர். தற்போது 50 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்தகரிக்கப்படுகிறது. இருப்பினும், கழிவுநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.
ரூ.386 கோடியில் திட்டப்பணிகள்:
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:
கழிவுநீர் குழாய்கள் உடைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண சென்னையில் ரூ.386 கோடியில் கழிவுநீர் குழாய்களை மாற்றுதல், பம்பிங்குக்காக அதிக திறன் கொண்ட மோட்டார்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 256 கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்களில் பெரிய மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு பம்பிங் ஸ்டேஷனில் இருந்து மற்றொரு பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் 600 அங்குல விட்டமுள்ள குழாய்கள் 1,000 அங்குலம் விட்டமுள்ள குழாய்களாகவும் அதுபோல தெருக்களில் பதிக்கப்பட்டுள்ள 6 அங்குல விட்டமுள்ள குழாய்கள் 10 அங்குல விட்டமுள்ள குழாய்களாகவும் மாற்றப்படுகின்றன. இந்தப் பணிகள் ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அடிக்கடி புகார் வரும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சென்னை முழுவதும் குழாய்கள் புதிதாக மாற்றப்பட்டு, கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றனர்.