சென்னை

அதிநவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையங்கள்: ரூ.70 கோடியில் அரசு மருத்துவமனைகளில் அமைகின்றன

ஆ. கோபிகிருஷ்ணா

சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் ரூ.70 கோடி செலவில் அதி நவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை (ட்ரூ பீம் ரேடியேஷன் தெரபி) மையங்கள் அமையவுள்ளன. இதற்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பத்திலான மருத்துவ சாதனங்கள் தருவிக்கப்பட உள்ளன.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அவை நிறுவப்பட உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த மையங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இத்தகைய உயர் நிலை மருத்துவ சாதனங்களுடன் கூடிய கதிரியக்க சிகிச்சை மையங்கள் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை தவிர, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளிலும் அந்த மையங்கள் அமையவுள்ளன. அவை செயல்படத் தொடங்கினால் அதன் வாயிலாக மாதத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தரவுகளின்படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு  மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்தாலும், தற்போது வரவுள்ள "ட்ரூ பீம் தெரபி' சாதனங்களானது உயர் தொழில்நுட்பத்திலானவையாகும். தனியார் மருத்துவமனைகளில்கூட இத்தகைய நவீன சிகிச்சை முறைகள் அரிதாகவே இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தைப் பொருத்து அவை வேறுபடுகின்றன. அதன்படி, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு தேவையின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
அரசு மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கதிரியக்க சிகிச்சைகளில் அதி நவீனமான ஒன்றாகக் கருதப்படும் "ட்ரூ பீம் ரேடியேஷன்' முறையானது பெரும்பாலான மருத்துவமனைகளில் இல்லை. அதற்கான மருத்துவ உபகரணங்களின் விலை மட்டும் சுமார் ரூ.20 கோடி என்பதால், அவற்றை வாங்க தனியார் மருத்துவமனைகளே தயக்கம் காட்டுகின்றன.
இந்தச் சூழலில்,  அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக 8 "ட்ரூ பீம் ரேடியேஷன்' சாதனங்களை கொள்முதல் செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்தது.  அந்த சாதனங்களை  அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டில் அது இறுதி செய்யப்பட்டது.
 அடுத்த சில மாதங்களுக்குள் ஓமந்தூரார் மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், ராயப்பேட்டை மருத்துவமனையிலும் அந்த சாதனங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 
இதற்காக அந்த மூன்று மருத்துவமனைகளிலும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து புதிய கட்டடங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கதிரியக்கம் வெளியேறாத வகையில் 4 அடி தடிமனில் அங்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வசதிகளை அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வந்து ஆய்வு செய்துள்ளனர்.

நோயாளிகளுக்கு மறுவாழ்வு

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத் கூறியதாவது:
புற்றுநோய்க்கு உயர் தரத்திலான சிகிச்சைகளை அளிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. அதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தற்போது பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகள் தமிழக சுகாதாரத் துறையின் நற்பெயருக்கு மேலும் வலுசேர்க்கக் கூடும் என்றார் அவர்.

சிகிச்சையை மேம்படுத்த...

ராயப்பேட்டை மருத்துவமனையின் கதிரியக்கத் துறை முதுநிலை மருத்துவர் டாக்டர் சரவணன் கூறியதாவது:
ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆண்டுதோறும் 1,500-க்கும் அதிகமான புற்று
நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. "ட்ரூ பீம்' சாதனங்கள் நிறுவப்பட்டால் அந்த சிகிச்சையை மேலும் மேம்படுத்த முடியும். அந்த சாதனங்களால் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளை அகற்ற இயலும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT