கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் தனது லத்தியால் அடித்து உடைக்கும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் கோட்டை போலீஸார், சில நாள்களுக்கு முன்பு போர் நினைவுச்சின்னம் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது போர் நினைவுச்சின்னத்தின் அருகில் சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபெட்டை ரோந்து வாகனத்தில் வந்த ஊர்க்காவல் படை வீரர் லத்தியால் உடைத்துள்ளார். அதை அருகே இருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் வேடிக்கை பார்த்துள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த அந்த மொபெட்டின் உரிமையாளரான இளைஞர், போலீஸாருக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மொபெட்டை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அப் பகுதியில் இருந்த ஒரு இளைஞர், தனது செல்லிடப்பேசி கேமரா மூலம் விடியோ காட்சியாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ காட்சி ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள், அது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையில், மொபெட் வைத்திருந்த அந்த இளைஞர், கோட்டை பகுதியில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும், சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் கஞ்சா வாங்க வந்திருப்பதும், அப்போது அங்கு ரோந்து வந்த போலீஸார் அந்த மாணவரை எச்சரித்தும் அங்கிருந்து செல்லாததால், ஊர்க்காவல் படை வீரர் அவரது மொபெட்டை தாக்கி உடைத்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன், இச் சம்பவத்தில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் மோகன், கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஹரிபாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
பணியிடை நீக்கம்: இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.