சென்னை

டிச.1 முதல் அமல்: சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை கட்டாயம்

DIN

சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களிலும் டிச.1 ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது உள்ள 531 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவற்றில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தில்லி போன்ற பெருநகரங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில்  ஃபாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டிச.1 ஆம் தேதி முதல், இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த முறை தமிழகத்திலும் கட்டாயப்படுத்தப்பட உள்ளது. 

ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற அட்டை வானொலி அலைகள் (ஆர்.எப்.ஐ.டி) வாயிலாக குறிப்பிட்டவற்றை அûடாயளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த அட்டை, வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் வலது புறத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

இதனை சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும். வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச் சாவடிகளில் அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையாக இந்த முறை கருதப்படுகிறது.

இந்த வில்லைகளைப் பெறுவதற்கு பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றில் வாகன பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,  அடையாள சரிபார்ப்புக்காக ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஃபாஸ்டேக் வில்லைகளைப் பெறலாம். மேலும் இணையதள விற்பனையகங்களிலும், வங்கிகளிலும் கூட இதனைப் பெறலாம். ஆனால் ஒவ்வொரு விற்பனையகங்களிலும் வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு சில விற்பனையாளர்கள் இதற்கென சிறப்புத் தள்ளுபடியும் வழங்குகின்றனர். இதை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேடிஎம் என அனைத்து இணைய வழியாகவும் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை ரீசார்ஜ் செய்யும் வகையிலான வசதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. 

இந்த முறையில் கட்டணம் செலுத்தும் வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்தவுடன், அதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இவ்வாறு செல்லும் வாகனங்கள் சுங்ச்சாவடிகளைக் கடக்கும் போது 10.கி.மீ வேகத்துக்குக் குறைவாக இயக்கப்பட வேண்டும். இந்த அட்டைக்கு என செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற இயலாது. 

மேலும் ஒரு வாகனத்துக்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த இயலாது. இந்த ஃபாஸ்டேக் வில்லைகளை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். வாகன உரிமையாளர்கள் தங்களது ஃபாஸ்டேக்கில் போதிய அளவு பணம் உள்ளதா என அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைத்து வாகனங்களும் சரியான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது கட்டணம் செலுத்தாத வாகனங்களால் மற்றவருக்கு இடையூறு ஏற்படுத்த நேரிடும். அரசு அளித்துள்ள தகவலின் படி இதுவரை 52 லட்சம் ஃபாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியது: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்கெனவே ஃபாஸ்டேக் முறை பயன்பாட்டில் உள்ளது.  டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த முறை கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படும். 

சில்லறைப் பிரச்னை, ஊழியர்களுடனான வாக்குவாதம் இல்லாமல் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் சீரான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT