சென்னை

திரு.வி.க.பூங்காவில் 1,250 மரங்களை நட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

மெட்ரோ ரயில் சேவைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க. பூங்காவில் ஆயிரத்து 250 மரக்கன்றுகளை நட்டு அந்தப் பூங்காவை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் உள்ளிட்ட 45 பேர் தாக்கல் செய்த மனுவில், "ஷெனாய் நகரில் உள்ள திரு. வி.க.பூங்காவுக்கு கீழே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர் 

ரயில் நிலையம் இந்தப் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பணிகளுக்காக பூங்காவில் இருந்த பழைமையான மரங்கள் வெட்டப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதியின்றி இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியன மேற்கொண்டு வருகின்றன. இந்த சுரங்கப் பாதை அமைப்பதற்காக ஷெனாய் நகர் திரு. வி.க. பூங்காவை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையகப்படுத்தியது. சுரங்கப் பாதைப் பணிகள் முடிந்ததும் அந்தப் பூங்காவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவாதத்தை மீறி மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வணிக வளாக மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வளர்ச்சித் திட்டங்களுக்காக கண்மூடித்தனமாக மரங்களை வெட்டுவதையும், மரங்களை பலியிடுவதையும் ஏற்க முடியாது. எனவே அரசு மரக்கன்றுகளை நட வேண்டும். 

திரு.வி.க. பூங்காவில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக ஆயிரத்து 250 பல்வகை மரங்கள் நடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதன்படி 1,250 மரங்களை நட வேண்டும். இந்த நீதிமன்றத்தைப் பொருத்தவரை சென்னை மாநகரில் தேவையான வாகன நிறுத்தங்களை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மரங்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. 

எனவே, திரு. வி.க. பூங்காவை மீண்டும் பழைய நிலைக்கு அதிகாரிகள் கொண்டு வரவேண்டும். மெட்ரோ ரயில் பணியின்போது இந்த பகுதியில் ஒலி மாசு அதிகம் இருந்ததாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் ஒலிமாசு நிர்ணயிக்கப்பட்ட அளவில் தான் இருந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT