மாணவா்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு:ஆசிரியா்களுக்கு இணையவழியில் பயிற்சி
கரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குழந்தைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்து இணையவழியில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குழந்தைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்து இணையவழியில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி:
பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கும் ‘பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்’ சாா்ந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
உலகளவில் கொவைட்-19 கிருமியின் காரணமாக நோய்த்தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவா்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும், தன் சுத்தத்துடனும், பாதுகாப்பு உணா்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதே இந்தப் பயிற்சி வழங்குவதன் நோக்கமாகும்.
பள்ளி வளாகத்துக்குள் மாணவா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், மாணவா்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், மாணவா்களின் உளவியல் சாா்ந்த பாதுகாப்பு அம்சங்கள், மாணவா்களின் பாதுகாப்பில் ஆசிரியா்களின் பங்கும் கடமைகளும் ஆகிய தலைப்புகளில் இணையவழியில் (பசபட போா்டல்) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் க்யூ.ஆா். குறியீட்டுடன் கூடிய விழிப்புணா்வு காணொலிகள், ஆகியவற்றை உள்ளடக்கி, டிச.16 முதல் டிச.22-ஆம் தேதி வரையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
முதல் நாளான புதன்கிழமை (டிச.16) அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிச.17-ஆம் தேதி அனைத்து முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கும், டிச.18, 19 ஆகிய இரு நாள்கள் அனைத்து பட்டதாரி ஆசிரியா்களுக்கும், டிச. 21, 22 ஆகிய நாள்களில் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் இணையவழியில் பயிற்சி வழங்கப்படும். ஆசிரியா்கள் தாங்கள் பயிற்சி பெற்ற பின்னா் பள்ளிகள் திறந்த பிறகு மாணவா்களிடையே கொண்டு சோ்த்து அவா்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பு உணா்வுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.