சென்னை: பட்டாசு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
கடந்த நவம்பரில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, பட்டாசு தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை ஆணையரிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வரப்பெற்றது. இந்த கடிதத்தை ஆய்வு செய்த தமிழக அரசு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி பணியாளர்கள் நல வாரியத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
யார் யார் உறுப்பினர்கள்?: நலவாரியத்தின் தலைவராக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் இருப்பார். அலுவல் சார் உறுப்பினர்களாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை செயலாளர், தொழிலாளர் நலத் துறை ஆணையர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் இருப்பர். வேலை அளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளாக மூன்று பேரும், தொழிலாளர்கள் சார்பில் மூன்று பேரும் இருப்பர். பட்டாசு தொழிலாளர் நல வாரியமானது முதலில் 62 ஆயிரத்து 661 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும்.
இந்த உறுப்பினர்கள் ஏற்கெனவே தொழிலாளர் நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தின் திட்டங்களைப் பெற, ஆண்டுக்கு தொழிலாளர்களின் பங்களிப்பாக தலா ரூ.200 வழங்க வேண்டும். பட்டாசு தொழிலாளர் நல வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஒரு முறை தொகுப்பு நிதியாக ரூ.5 கோடியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உருவாக்குவார். இந்த நிதிக்காக ஏராளமான தொழில் ஆலைகளைச் சேர்ந்தவர்கள் நிதி தர முன்வந்துள்ளனர்.
நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக புரட்சித் தலைவி அம்மா ஒருங்கிணைந்த விபத்து காப்பீட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.