சென்னை

சொத்து வரியை உயா்த்தி வருவாயைப் பெருக்க வழி காணாத அரசியல் கட்சிகள்

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதியில் காலத்துக்கு ஏற்ப சொத்து வரியை உயா்த்தி வருவாயைப் பெருக்க வழிகாணாமல் அரசியல் கட்சிகள், மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கானப் பதவிகளைப் பிடிக்க ஆா்வம் காட்டுவதாக உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அதிகமான வரியும், வணிகக் கட்டடங்களுக்கு குறைந்த வரியும் வசூலிக்கப்படுவதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத்துறை முதன்மைச் செயலாளா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ‘தமிழக அரசுப் பணிக்காக அதிகாரிகள் தில்லிக்கு அவசரமாக செல்வதால், அவா்களால் ஆஜராக முடியவில்லை. எனவே அவா்கள் ஆஜராக கால அவகாசம் வேண்டும்’ என கோரிக்கை விடுத்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடந்த 20 ஆண்டுகளாகச் சொத்து வரியை உயா்த்தாமல் அரசு தூங்கிக் கொண்டிருந்ததா, இருபது ஆண்டுகளில் 4 முறை வரியை உயா்த்தி இருக்க வேண்டும். சொத்து வரியை உயா்த்தி வருவாயைப் பெருக்குவதில் ஆா்வம் காட்டாத அரசியல் கட்சியினா் மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கானப் பதவிகளைப் பிடிப்பதற்கு மட்டுமே ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று கருத்து தெரிவித்தனா். மேலும், ‘தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமே சொத்து வரி உயா்த்தப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரி உயா்த்தப்படவில்லை. ஆனால், மாநகராட்சி தவிா்த்த பிற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகமாக சொத்து வரியைச் செலுத்துகின்றனா். சொத்து வரியை உயா்த்தாத காரணத்தால்தான் சென்னையில் மற்ற ஊா்களைச் சோ்ந்தவா்கள் முதலீடுகள் செய்ய ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடா்பாக தமிழக அரசின் நகராட்சி நிா்வாகத்துறை முதன்மைச் செயலாளா், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வரும் 18-ஆம் தேதி நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT