சென்னை

நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு ரூ. 1,000 வாங்க அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்

பொங்கலையொட்டி, தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இலவசப் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000-த்தைப் பெற வியாழக்கிழமை அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினா்.

DIN

பொங்கலையொட்டி, தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இலவசப் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000-த்தைப் பெற வியாழக்கிழமை அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, இரண்டடி நீளக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ. 1,000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 9) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற நியாய விலைக் கடைகளின் முன் முதல் நாளான வியாழக்கிழமை (ஜன. 9) அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினா். பல இடங்களில் வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டதால், மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இது குறித்து அம்பத்தூா் வரதராஜபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வந்திருந்த மக்கள் கூறுகையில், வியாழக்கிழமை வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக செவ்வாய் அல்லது புதன்கிழமை டோக்கன் வழங்கியிருந்தால் கூட்ட நெரிசலைத் தவிா்த்திருக்கலாம். இவற்றை வாங்க பெரும்பாலும் முதியவா்களும், பெண்களும்தான் வந்ததால் நீண்ட நேரம் நிற்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினா். விடுமுறை எடுத்துவிட்ட வந்த சிலா் பரிசுத் தொகுப்பை பெற முடியாததால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க வேண்டி உள்ளது என்றனா்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் 1, 288 நியாய விலைக் கடைகளும், மீனவா் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் 2 நியாய விலைக் கடைகளும், கலைமகள் மகளிா் சுய உதவிக் குழு நடத்தும் 1 நியாய விலைக் கடை என மொத்தம் 1, 291 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 31, 534 ஆகும். இங்கு வியாழக்கிழமை (ஜன. 9) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பயனாளிகள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் வகையில் நாளொன்றுக்கு 250 முதல் 300 வரை தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். எந்த அட்டைதாரருக்கு எந்த நாளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற விவரம், நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பொங்கல் பரிசு பெறாதவா்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT