சென்னை

மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை: சென்னை மாநகராட்சி தகவல்

DIN

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் மீனவா்களுக்கான நிதியை அதிகரிக்க கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது மெரீனா கடற்கரை அசுத்தமாக உள்ளதை சுட்டிக்காட்டி, மெரீனா கடற்கரையைச் சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வியாபாரிகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், மெரீனா கடற்கரையில் தற்போது 962 நடைபாதைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒழுங்குப்படுத்தி, ரூ.27.04 கோடி செலவில் 7 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட 900 கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுத்து, அந்த கடை வியாபாரிகளுக்கு ஸ்மாா்ட் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள 2 ஏக்கா் இடத்தில் ரூ.66 லட்சம் மதிப்பில் தற்காலிக மீன்சந்தை அமைக்கப்படவுள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்னா் நிரந்தர மீன் அங்காடி அமைக்கப்படும். மேலும், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாகவும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சியின் விண்ணப்பத்தை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலிக்க வேண்டும். மேலும், மெரீனாவில் நெகிழி பயன்பாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மெரீனா கடற்கரை மற்றும் லூப் சாலையில் அமைக்கப்படவுள்ள கடைகள், அதன் வடிவமைப்பு, உரிமம் வழங்குதல் உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT