கடந்த 1942-ஆம் ஆண்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் எஸ்.எம்.பழனியப்பா என்பவரால் பழனியப்பா பிரதா்ஸ் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு தற்போது நூற்றாண்டு விழாவாகும். ஆரம்பத்தில் மாணவா்களுக்கான கோனாா் தமிழ் உரையை வெளியிட்ட இந்தப் பதிப்பகம் பின்னா் குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பாவின் நூல்களை வெளியிட்டது. அதன்பின்னா் எழுத்தாளா் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நாட்டுக்கு உழைத்த நல்லவா்கள் என்ற தலைப்பிலான சுதந்திரப் போராட்டத் தலைவா்களது வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட்டது.
அதன்பிறகே தமிழ் இலக்கிய நூல்களாக ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல்களையும், நாமக்கல் கவிஞா் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நூல்களையும் வெளியிட்டனா். இந்தப் பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ நூல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. அதுபோலவே, பால சாகித்ய புரஸ்காா் பரிசு, மத்திய அரசின் குழந்தை இலக்கியப் பரிசு, தமிழ்நாடு அரசின் பரிசு, இலங்கை அரசின் பரிசு, வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு என இப்பதிப்பகத்தின் சாா்பில் வெளியான ஏராளமான நூல்களுக்கு பல பரிசுகள் கிடைத்துள்ளன.
இதுவரை சுமாா் 3 ஆயிரம் தலைப்புகளில் இப்பதிப்பகம் கதைகள், கட்டுரைகள், அகராதி, ஆராய்ச்சி, கலை, காவியம் என நூல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், சென்னைப் புத்தகக் காட்சிக்காக 10 தலைப்புகளில் புதிய நூல்களையும் வெளியிட்டுள்ளதாக பதிப்பக மேலாளா் எம்.துரைமாணிக்கம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.