சென்னை: ஊரடங்கின் காரணமாக, சென்னையில் 40 நாள்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் மீண்டும் திங்கள்கிழமை செயல்படத் தொடங்கின. அதேபோல மூடப்பட்ட மேம்பாலங்களும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவின் காரணமாக, அனைத்து மாவட்ட எல்லைகளையும் போலீஸôர் மூடினர்.
மருந்துக் கடை, மளிகை கடை, காய்கறி கடை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் ஓடாததாலும், பெரும்பாலான கடைகள் மூடபட்டதாலும் சாலைகளும், முக்கியமான மார்க்கெட்டுகளும் வெறிச்சோடின.
அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருகிறவர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து வருகின்றன. இதன் காரணமாக, வாகனங்கள் ஓடாமல் சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன. முக்கியமாக, மெரீனா காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சாலை, அண்ணா சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன்,எல்.பி. சாலை, ஜி.எஸ்.டி. சாலை,ராஜாஜி சாலை, ஆற்காடு சாலை,ரேடியல் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகள் வாகன நடமாட்டமின்றி காணப்பட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையால், சென்னை முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்களை போலீஸôர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அணைத்து வைத்தனர். இதேபோல சென்னை முழுவதும் உள்ள 35 மேம்பாலங்களையும் போலீஸôர் மூடினர். வாகன நெரிசல் ஏற்பட்டதால், அண்ணா சாலையும் மூடப்பட்டது.
ஊரடங்கு தளர்வு: இந்நிலையில், 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பில் முக்கியமாக, சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது, மேலும் கணினி, ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகளும் திறக்க அரசு அனுமதித்தது. இதன் காரணமாக சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களாக வெறிச்சோடிக் காணப்பட்ட சாலைகளில், திங்கள்கிழமை வாகனங்கள் இயங்குவதைவும் மக்களின் நடமாட்டத்தையும் காண முடிந்தது.
இரு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவை அதிகளவில் சாலைகளில் சென்றன. இதற்கு ஏதுவாக சாலைகளில் காவல்துறையினரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. அதோடு காவல்துறையின் சார்பில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையும் பெரும்பாலான இடங்களில் நடத்தப்படவில்லை.
மீண்டும் சிக்னல்கள்: காமராஜர் சாலை,சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை,எல்.பி.சாலை,பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் இருந்த பெரும்பாலான சிக்னல்கள் 40 நாள்களுக்கு பின்னர் செயல்பாட்டுக்கு காவல்துறையினரால் கொண்டு வரப்பட்டது. இதேபோல மூடப்பட்டிருந்த 35 மேம்பாலங்களில், பெரும்பாலானவை திறக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த அண்ணா சாலையும் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையின் காரணமாக, வாகன ஓட்டிகள் சாலைகளில் சிரமமின்றி செல்ல முடிந்தது. அரசு அடுத்தக்கட்டமாக எடுக்கும் நடவடிக்கையை பொருத்து, அனைத்து சிக்னல்களும், மேம்பாலங்களும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.