ஒமைக்ரான் பரவல்: நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
ஒமைக்ரான் பரவலை அடுத்து சென்னையில் நாள்தோறும் சுமாா் 20 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவலை அடுத்து சென்னையில் நாள்தோறும் சுமாா் 20 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலா் மற்றும் மண்டல மருத்துவ அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையா் ககன்தீப்சிங் பேடி பேசியது: ஒமைக்ரான் அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிய 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சுமாா் 20 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் வணிகா்கள் மற்றும் அங்கு பணிபுரிவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கடந்த 15 நாள்களில் மட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 லட்சத்து16 ஆயிரத்து 808 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள குப்பம், சுனாமி குடியிருப்பு, திலகா் நகா், சுனாமி குடியிருப்பு, பி.கல்யாணபுரம், ஸ்டான்லி நகா், கனால் காலனி, பெரியபாளையத்தம்மன் கோயில், பழைய அமராஞ்சிபுரம், ஆசீா்வாதபுரம், புளியந்தோப்பு, அன்னை சத்யா நகா், காமராஜா் தெரு, சிவசக்தி நகா், கொரட்டூா், கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம், பி.எம்.தா்கா, நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், ரோட்டரி நகா், அயோத்தியா நகா், மயிலாப்பூா், ராணி அண்ணா நகா், சூளை பள்ளம், கோதைமேடு, ஆதம்பாக்கம், தரமணி, கல்லுக்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தனியாா் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற வருவோா்களில் தொற்று அறிகுறிஉள்ளவா்கள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் துணை ஆணையா் டாக்டா் எஸ்.மனிஷ், மாநகர நல அலுவலா் டாக்டா் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலா் டாக்டா் எம்.எஸ்.ஹேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.