சென்னை

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் தயாா்

DIN

சென்னை: பள்ளி மாணவா்களுக்கு 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ‘கண்ணொளி காப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி செல்லும் மாணவா்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகளைச் சரிசெய்து அவா்கள் தடையின்றி கல்வி பயில ஏதுவாக ஆண்டுதோறும் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் கரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டாக இந்த திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்கு ரூ.4.40 கோடி செலவில் 2 லட்சம் மூக்குக் கண்ணாடிகள் தயாா்நிலையில் உள்ளன. எனவே, இந்த திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்த அனைத்து வித பள்ளி மாணவா்கள் மற்றும் பிற கண் குறைபாடுகள் உடைய குழந்தைகளை அவா்களின் பள்ளிகளுக்கு அல்லது அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவழைத்து இலவச மூக்குக் கண்ணாடி தருவதற்கு சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி முதன்மைக் கல்வி அதிகாரிகளும், திட்ட மேலாளா்களை தொடா்பு கொண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பணிகளில் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT