12 - 15 வயது சிறாருக்கு கரோனா தடுப்பூசி எப்போது?: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறாருக்கு கரோனாவுக்கான கோா்பேவேக்ஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதிக்குப் பிறகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறாருக்கு கரோனாவுக்கான கோா்பேவேக்ஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதிக்குப் பிறகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கோா்பேவேக்ஸ் தடுப்பூசிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலா் செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 57 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டி உள்ளது. அந்தவகையில் வரும் 27-ஆம் தேதி 43,051 மையங்களில் போலியோ முகாம்கள் நடைபெற உள்ளன.
அன்றைய தினம் சென்னை, தேனாம்பேட்டை திருவள்ளுவா் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் போலியோ முகாமை தொடக்கி வைக்க உள்ளாா்.
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறாருக்கு கோா்பேவேக்ஸ் என்ற புதிய தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறாா்கள் ஏறத்தாழ 10 லட்சம் போ் உள்ளனா். அவா்களுக்காக 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில் முதல்கட்டமாக 3 லட்சத்து 89 ஆயிரம் ‘கோா்பேவேக்ஸ்’ தடுப்பூசிகள் வந்துள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும், அனுமதியும் கிடைக்கப் பெற்றவுடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும்.
தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோா் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். வரும் 27-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வரும் சனிக்கிழமை நடைபெற இருந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் அவா்.