சென்னை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது

DIN

ஆவடி: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்தார்.
 ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்துக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை வந்தார். பின்னர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, கொள்ளை போய்  மீட்கப்பட்ட 218 சவரன் தங்க நகைகள், 100 கைப்பேசிகள், ரூ. 74 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட  ரூ.1.72 கோடி மதிப்புள்ள பொருள்களை அதன் உரிமையாளர்களிடம்  ஒப்படைத்தார். 
இதையடுத்து, அவர் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலர்களைப் பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினார். மேலும் அவர் தீங்கு விளைவிக்காத மிளகு ஏவுதல் துப்பாக்கி, ரப்பர் பந்து லாஞ்சர், ஷாக் பேட்டன், ஷாக் ஷீல்ட்ஸ், மெட்டல் கை விலங்குகள், விரிவுபடுத்தக்கூடிய தடியடி, உடலில் அணியும் கேமரா உள்ளிட்டவற்றின் செயல் முறை விளக்கம் மற்றும் பயன்பாட்டை பார்வையிட்டார். 
பின்னர், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியது:
ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள காவலர்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காவலர்களை தாக்கக்கூடிய ஒரு சில குற்றவாளிகளை காயமின்றி, உயிரிழப்பு இன்றி அவர்களை லத்தி, துப்பாக்கி இல்லாமல் எப்படி கைது செய்வது, அவர்களை பெப்பர் ஸ்பிரே, பிளாஸ்டிக் புல்லட் ஆகியவற்றை பயன்படுத்தி பிடிப்பது, மேலும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை வைத்திருக்கும் மோசமான குற்றவாளிகளை மின்சாரம் பாய்ச்சி பிடிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதில் ஆண் காவலர்களுடன், பெண் காவலர்களுக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் நோக்கம் எந்தவித காயமும் இன்றி, உயிர்ச்சேதம் இன்றி குற்றவாளிகளை கைது செய்வதாகும். 
சில நேரங்களில் காவல் நிலையங்களில் மரணம் நடப்பதற்கு முக்கிய காரணமே, குடிபோதையில் சில குற்றவாளிகள் காவலர்களைத் தாக்குவது, தகராறு செய்யும் நேரத்தில் காவலர்கள் லத்தியால் அடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 
இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களை லத்தியால் அடிக்காமல் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து கை விலங்கிட்டு கைது செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. வருங்காலங்களில் கைதி மரணங்கள் நடக்கக் கூடாது, நடக்காது. 
மேலும், கஞ்சா ஆபரேஷன் வேட்டை 1 மற்றும் 2 ஆகியவற்றில் 20 ஆயிரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்துள்ளோம். மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம். 
அது மட்டுமின்றி குற்றச் செயலில் ஈடுபடுவோர் வசதியாக இருப்பின் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். வங்கிக் கணக்கும் முடக்கப்படும்.
தமிழகத்தில் மத, ஜாதி கலவரம் கிடையாது. துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை.  சாராய மரணம் கிடையாது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தூரமான மலைப்பகுதிகளில் நடைபெறும் கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் ஆணையர் பி. விஜயகுமாரி, ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையர் ஜெ.மகேஷ், மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் பி.பெருமாள், தலைமையிட மற்றும் நிர்வாகத் துணை ஆணையர் ஜி.உமையாள், போக்குவரத்து காவல் துணை ஆணையர் எம்.எம்.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT