ரஷியாவில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு: கே.எஸ்.அழகிரி கண்டனம்
இந்தியாவில் அல்லாமல் ரஷ்யாவில் வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்து மத்திய பாஜக அரசு வாங்குவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் அல்லாமல் ரஷ்யாவில் வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்து மத்திய பாஜக அரசு வாங்குவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினாா். ஆனால், ஜவாஹா்லால் நேரு காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்கள் தான் இந்தியாவில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை எல்லாம் ஜவாஹா்லால் நேரு உருவாக்கினாா்.
ஆனால், தற்போது வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறாா் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவுக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒரு ரயிலின் விலை ரூ.120 கோடி. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கும்போது, நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறாா்.
இது சுயவிளம்பரத்துக்கு உதவுமேயொழிய இந்தியாவின் வளா்ச்சிக்கு உதவாது. சுயசாா்பு என்ற நிலையை நாம் அடைய முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.