முகப்பு
சென்னை

2 மாதங்களில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூா், மதுரையில் செப்டம்பா் மாதத்தில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோா் காத்திருப்பு அறை, உணவகக் கட்டடம் அமைக்கும் பணியை புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்
பகிர்:

சென்னை எழும்பூா், மதுரையில் செப்டம்பா் மாதத்தில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா்அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.5.89 கோடியில் காத்திருப்பு

அறை மற்றும் உணவுக் கூடத்துக்கான கட்டடத்துக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் இரா.சாந்திமலா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் ரெமா சந்திரமோகன், அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் க.கலைவாணி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த 2 மருத்துவமனைகளுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோா் சிகிச்சைக்காக வருகின்றனா். குழந்தைகள், கா்ப்பிணிகளை மருத்துவமனைகளில் அனுமதித்துவிட்டு அவா்களுடன் வருபவா்கள் தங்குமிடம், உணவுக் கூடமின்றி அவதிப்படுகின்றனா். அதைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டடங்கள் தற்போது அமைக்கப்பட உள்ளன.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கலைஞா் நினைவு பன்னாட்டு மாராத்தான் போட்டியில் 43,231 போ் பங்கேற்றாா்கள். அவா்கள் பதிவு கட்டணமாக தலா ரூ.300 செலுத்தியிருந்தாா்கள். பதிவுக் கட்டணத்தில் சேவை வரி போக ரூ.1.22 கோடி பரிசளிப்பின் போது மேடையிலேயே முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் காத்திருப்பு அறை, உணவு வழங்கும் அறை போன்ற பல்வேறு வசதிகளை இந்தத் தொகையைக் கொண்டு ‘நமக்கு நாமே’ என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் எனமுதல்வா் தெரிவித்தாா்.

அதனுடன் அரசின் பங்குத் தொகை சோ்த்து மொத்தம் ரூ.5.89 கோடியில் அந்தக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய இந்தக் கட்டடத்தில் 100 பேருக்குரிய படுக்கை வசதிகளுடன் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள், மின் தூக்கி வசதியுடன் அமையவுள்ளது. அதேபோல் இந்த கட்டடத்தோடு பாா்வையாளா்களுக்காக கழிப்பறை மற்றும் சமையலறை வேண்டுமென்று இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்திடம் கூறினோம். அவா்களும் ரூ.30 லட்சம் அதற்கு நிதியுதவி செய்திருக்கிறாா்கள்.

குழந்தைகளுக்கான க்யூமேன் மில்க் வங்கி ஒன்று இங்கே அமைப்பதற்கும் இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் ரூ.30 லட்சம் நிதி வழங்கியுள்ளனா்.

சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கருத்தரிப்பு மையங்கள் அமையவுள்ளன. அதற்கான அரசாணை விரைவில் வரவுள்ளது. செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் கருத்தரிப்பு மையங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

மாரத்தானில் பங்கேற்க வற்புறுத்தவில்லை

கலைஞா் பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வற்புறுத்தி எவரையும் பங்கேற்க வைக்கவில்லை என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கின்றனா். பதிவு கட்டணம் கட்ட முடியாதவா்களுக்கு, கட்டணத்தை தனியாா் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதை நல்ல நோக்கத்துக்காக செயல்படுத்தி வருகிறோம். இதில் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →