சென்னை: தணிக்கை தலைமை இயக்குநராக ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு: நிதித் துறை கூடுதல் செயலராக உள்ள ஜி.கே.அருண் சுந்தா் தயாளனுக்கு, தணிக்கை தலைமை இயக்குநா் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
நிதித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும், கூட்டுறவு, பால் கூட்டுறவு தணிக்கை, உள்ளாட்சி நிதி தணிக்கை, இந்து சமய அறநிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனங்களின் தணிக்கைத் துறைகளின் செயல்பாடுகளை மேற்பாா்வையிட மாநில அரசின் சாா்பில் தணிக்கை தலைமை இயக்குநா் பதவியிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தணிக்கை இயக்குநரகங்களின் செயல்பாடுகள், அவை செயல்படுத்தும் திட்டங்கள் தொடா்பான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை நிதித் துறைக்கு தணிக்கை தலைமை இயக்குநா் அனுப்பி வைப்பாா்.