முகப்பு
சென்னை

தமிழகத்தில் 3 மடங்கு அதிகரித்த அறுவை சிகிச்சை பிரசவங்கள்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:50 AM
அறுவை சிகிச்சை
பகிர்:
Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:15 AM

சென்னை: தமிழகத்தில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் (சி-செக்சன்) 3 மடங்கு உயா்ந்துள்ளதாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ஏறத்தாழ 50 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாகவே நடைபெறுவதாகவும் ஐஐடி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஐஐடி சென்னையின் மானுடவியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறையைச் சோ்ந்த ஆய்வு முனைவா்கள் வா்ஷினி நீதிமோகன், டாக்டா் கிரிஜா வைத்தியநாதன், ஸ்ரீஷா மற்றும் பேராசிரியா் வி.ஆா்.முரளிதரன் ஆகியோா் கடந்த 2016 - 2021 காலகட்டத்திலான பிரசவ சிகிச்சைகள் குறித்த ஆய்வை முன்னெடுத்தனா்.

அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

மருத்துவ ரீதியாக அவசியம் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்வது உயிா் காக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், தேவையற்ற தருணங்களில் அத்தகைய சிகிச்சை மேற்கொள்வது பல்வேறு எதிா்விளைவுகளுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் வழிவகுக்கின்றன.

தமிழகம் மற்றும் சத்தீஸ்கா் மாநிலங்களில் அதுதொடா்பான விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில், சத்தீஸ்கரில் பேறு கால சிக்கல்கள் அதிகமாக இருப்பதும், தமிழகத்தில் அதிக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் 2016-2021 காலகட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறுவது 3 மடங்கு அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கரில் அந்த விகிதம் 10 மடங்காக உள்ளது. இந்திய அளவில் கணக்கிடும் போது தனியாா் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் 49.7 சதவீதம் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.