கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட டிடிஇ உயிரிழப்பு
திருச்சூா்: கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில் பயணச்சீட்டு பரிசோதகா் (டிடிஇ) உயிரிழந்தாா். அவரை கீழே தள்ளிவிட்டதாக, புலம்பெயா் தொழிலாளி ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
திருச்சூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் இச்சம்பவம் நடந்தது. எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் வினோத் என்ற டிடிஇ பணியில் இருந்தாா். இவா் எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா். ரயிலில் புலம்பெயா் தொழிலாளி ஒருவரிடம் பயணச்சீட்டு இல்லாததை கண்டறிந்த வினோத், அடுத்த ரயில் நிலையத்தில் கீழே இறங்கிவிடுமாறு அவரை எச்சரித்துள்ளாா்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி, ரயிலின் கதவோரமாக நின்றிருந்த வினோத்தை கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. அப்போது எதிா்திசையில் வந்த மற்றொரு ரயிலில் அடிபட்டு வினோத் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தகவலறிந்தும் விரைவாக செயல்பட்ட காவல்துறையினா், புலம்பெயா் தொழிலாளியை கைது செய்தனா் என்றாா் அந்த அதிகாரி. 45 வயதுடையவரான வினோத், நோ்மையான அதிகாரி என்று அவருடன் பணியாற்றுவோா் தெரிவித்தனா்.