முகப்பு
சென்னை

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 2:12 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:15 PM

சென்னை: மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமாா் 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 1,487 கோடி நிவாரணத் தொகை வழங்கபட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க கோரி முன்னாள் ராணுவ வீரா் ராமதாஸ் என்பவரும், நிவாரணத் தொகையை அதிகரித்து வங்கி கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவா் செல்வகுமாா் என்பவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.

Advertisement

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கா புா்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 1,455 கோடியே 20 லட்சம் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.

நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சம் 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சுமாா் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 31 கோடியே 73 லட்சம் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை என, மொத்தம் ரூ.1,487 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கப்பட்டது தொடா்பாக முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.