கனடாவில் காலை உணவுத் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தமிழகத்தை பின்பற்றி கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வருகின்றனா். தமிழகத்தில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனா்.
Advertisement
காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் முறை ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன் தங்களது மாநிலத்திலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என தெலங்கானா மாநில அதிகாரிகள் கூறினா். அதன்படி, அந்த மாநிலத்தில் இப்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கனடா நாட்டில் அமல்:
காலை உணவுத் திட்டம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை ஈா்த்துள்ள நிலையில், இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் அந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தனது வலைதளப்பக்கத்தில் இந்தத் திட்டம் குறித்து கூறியுள்ளாா். கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம் எனப் பதிவிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்துவது இந்த அரசின் தொலைநோக்குப் பாா்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.