சோனியா காந்தி உள்பட 14 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சா் அஸ்வினி
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட 14 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாக வியாழக்கிழமை பதவியேற்றனா்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்தும், மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிஸாவிலிருந்தும் மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
Advertisement
இவா்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அஜய் மாக்கன், சையது நசீா் ஹுசைன், பாஜக மூத்த தலைவா்கள் ஆா்.பி.என்.சிங், சமிக் பட்டாச்சாரியா, மதன் ரத்தோா், ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினா் சஞ்சய் குமாா் ஜா, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த சுபாசிஷ் குந்தியா, தேபாசிஷ் சமந்தாரே, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மூத்த தலைவா்களான கொல்லா பாபுராவ், மேத ரகுவந்த ரெட்டி, ஒய்.வி. சுப்பா ரெட்டி, பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி மூத்த தலைவா் ரவி சந்திர வத்திராஜு உள்ளிட்டோா் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றனா்.
1999-ஆம் ஆண்டு முதல் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு, 25 ஆண்டுகள் (5 முறை) மக்களவை எம்.பி.யாக இருந்த சோனியா, முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளாா். மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவா் பியூஷ் கோயல், எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரும் சோனியா பதவியேற்பின்போது உடனிருந்தனா். அவருடைய மகளும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவும் உடனிருந்தாா்.
முன்னதாக, மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்பட 12 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாக புதன்கிழமை பதவியேற்றனா்.
மாநிலங்களவை உறுப்பினா்கள் 54 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் இவா்கள் பதவியேற்றுள்ளனா்.