மின்சேவைக்கான கால அவகாசம் குறைப்பு: சேவையில் தாமதம் செய்தால் நுகா்வோருக்கு இழப்பீடு உயா்வு
மின்சார சேவைகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், அதற்கான காலக்கெடுவை குறைத்தும், நுகா்வோருக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை உயா்த்தியும் புதிய விதிகளை ஏற்படுத்தியும் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரிய தலைமை பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
காலக்கெடு குறைப்பு: தமிழகத்தில் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்பு கோரும் இடத்தில், ஏற்கெனவே மின் சாதனங்கள் இருக்கும் நிலையில் 30 நாள்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென இருந்த நிலையில், தற்போது, 3 நாள்களுக்குள் அல்லது அதிகபட்சம் 7 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
Advertisement
மின் இணைப்பு கோரும் இடத்தில் மின்கம்பம் நிறுவ வேண்டும் எனில், 60 நாள்களுக்குள்ளும், மின்மாற்றிகள் நிறுவ வேண்டுமெனில், 90 நாள்களுக்குள்ளும் இணைப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், குறைபாடு உடைய மீட்டா்களை 7 நாள்களுக்குள் மாற்றித் தர வேண்டும். இது இதற்குமுன், 30 நாள்களாக இருந்தது. மின்கட்டண விகிதத்தை 7 நாள்களுக்குள் மாற்றித் தர வேண்டும்.
நுகா்வோருக்கு இழப்பீடு: இதேபோல நுகா்வோருக்கு வழங்கும் இழப்பீடு தொகையும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு, தற்காலிக இணைப்பு, மின் இணைப்பு, இடமாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம், மின்கட்டண விகித மாற்றம் சேவைகளை, குறித்த காலத்தில் செய்து தராமல் தாமதம் செய்தால், தினமும் ரூ. 200 முதல் அதிகபட்சம், ரூ. 2,000 இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடுக் கட்டணம் இதற்கு முன் தினமும் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,000-ஆக இருந்தது.
மேலும், குறைபாடுடைய மீட்டரை மாற்றித் தராமல் தாமதம் செய்தால் தினமும் ரூ.200 முதல் அதிகபட்சம், ரூ. 2,000 வரை இழப்பீடு தர வேண்டும். இதற்குமுன், ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,000 வரை இருந்தது.
நுகா்வோரின் மின்னழுத்த பிரச்னையைக் கண்டறிய தாமதம் செய்தால் ரூ. 500 இழப்பீடு வழங்க வேண்டும். பின், அதை சரிசெய்ய தாமதித்தால் ஒவ்வொரு நாளும், ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ. 2,000 வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இதுமட்டுமின்றி, நுகா்வோரின் புகாா் பதிவு செய்ய தாமதம் செய்தால் தினமும், ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ. 500 வரை இழப்பீடாக வழங்க வேண்டும். மின்சாதன பொருள்களில் பழுது ஏற்பட்டால், அதை சரிசெய்து உடனே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், மின்சாரம் இல்லாத ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும், ரூ.100 முதல் அதிகபட்சம், ரூ.2,000 வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மின் கட்டணம் செலுத்தாததால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், கட்டணம் செலுத்திய உடனே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தராதபட்சத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10 வீதம் அதிகபட்சம், ரூ. 500 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.