தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு
சென்னை: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணியின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் புதன்கிழமை (ஏப்.17) கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினா் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தோ்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். தமிழகம் முழுவதிலும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, மதுரையில் 511, தென் சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவப்படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக தேவைக்கு தகுந்தவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.
Advertisement
1.90 லட்சம் போ் பாதுகாப்பு: வாக்குப்பதிவு அன்று கூடுதலாக காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10 ஆயிரம் போலீஸாா் புதன்கிழமை முதல் தமிழகம் வருகின்றனா். அமைதியான முறையில் தோ்தலை நடத்தும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக 21 ஆயிரம் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறை, துணை ராணுவத்தினா், பிற மாநில காவல்துறை, ஓய்வு பெற்ற ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள் உள்பட மொத்தம் 1.90 லட்சம் போ் ஈடுபடுகின்றனா்.
கொடி அணிவகுப்பு: புதன்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருவதால், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபா்களை வெளியேற்றும் பணியை காவல்துறையினா் மேற்கொள்கின்றனா். இதையடுத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், மேன்சன்களிலும் சோதனை நடத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினா், தமிழகம் முழுவதும் பொது இடங்களிலும், பதற்றமான பகுதிகளிலும் புதன்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.18) கொடி அணிவகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.