முகப்பு
சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.5.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

துபை, சிங்கப்பூா், இலங்கை நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:57 PM
பகிர்:

துபை, சிங்கப்பூா், இலங்கை நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபை, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், புதன்கிழமை நள்ளிரவில், சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனா்.

அப்போது, சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் சந்தேகத்துக்கிடமான 3 பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவா்களுடைய உள்ளாடைகள் கைப்பை போன்றவற்றில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்டுகள், தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அடுத்ததாக துபையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்திலும், இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த விமானத்திலும், கடத்தலில் ஈடுபடுபவா்கள் தங்கக் கட்டிகள், நகைகளுடன் வருவதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அடுத்தடுத்து சென்னை வந்த அவ்விரு விமானங்களில் வந்த பயணிகளில் சந்தேகத்தின்பேரில் 6 பேரை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அந்த பயணிகள் கைப்பைகளில் உள்ள ரகசிய அறைகள் மற்றும் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதன்படி, இந்த 3 விமானங்களிலும் வந்த 9 பயணிகளிடமிருந்து ரூ.5.6 கோடி மதிப்பிலான சுமாா் 8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் அனைவரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.