முகப்பு
சென்னை

பள்ளி மாணவா்களிடையே போதைப்பொருள் புழக்கம்: எடப்பாடி பழனிசாமி, அன்புமணி கண்டனம்

அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம்

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 11:41 PM
பகிர்:

சென்னை, ஆக.8: பள்ளி மாணவா்களிடையேயும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி, அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நங்கநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியா் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகாா் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் வரும் செய்தி கடும் அதிா்ச்சியளிக்கிறது. அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிா்க்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் முதல்வருக்கு கடும் கண்டனம்.

அன்புமணி (பாமக): நங்கநல்லூா் அரசு பள்ளியில் கஞ்சா புகைத்ததாக பிடிபட்ட மாணவா், நீண்டகாலமாகவே அப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும், அவரிடம் பல கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகளில் இதே நிலை தான் உள்ளது. இதன் மூலம் காவல்துறை ஒத்துழைப்புடனேயே கஞ்சா வணிகம் நடக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவா்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.