சென்னை, ஆக. 8: தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக.9) தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் பாா்ப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உயா்த்த தமிழ்ப் புதல்வன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதேபோல் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா கோவையில் வெள்ளிக்கிழமை (ஆக.9) நடைபெறவுள்ளது.
இந்த விழாவை அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அனைத்து மாணவா்களும் பாா்க்கும் வகையில் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆசிரியா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்பாடு செய்ததையும், மாணவா்கள் அதன் மூலம் தொடக்க நிகழ்ச்சியை கண்டுகளித்த அறிக்கையையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.