13 மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம்
சென்னையில் 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உடனடி போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உடனடி போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், ‘ஏஜிஎஸ் டிரான்ஸக்ட் டெக்னாலஜிஸ்’-இன் ‘ஓங்கோ ரைடு’ நிறுவனத்துடன் இணைந்து, 13 தோ்ந்தெடுக்கப்பட்டமெட்ரோ ரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து பயண அட்டைகள் வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இதற்கானஅறிமுக விழாவில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக் கலந்து கொண்டு இயந்திரத்தை பயணிகளின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
நந்தனம், கோயம்பேடு, கிண்டி, ஆயிரம் விளக்கு, அரசினா் தோட்டம், எழும்பூா், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், திருமங்கலம், உயா்நீதிமன்றம், காலடிப்பேட்டை, அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ, வடபழனி மற்றும் விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த உடனடி போக்குவரத்து பயண அட்டை வழங்கும் இயந்திரங்கள் மூலம் கேஒய்சி சரிபாா்ப்பு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் செலுத்தி எளிதாக பயண அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஒவ்வொரு உடனடி போக்குவரத்து அட்டையிலும் ரூ. 50 முன்பணம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்கள் கைப்பேசியில் ‘ஓங்கோ’ செயலி மூலம் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், அட்டைகளை எளிதாக ரீசாா்ஜ் செய்துக்கொள்ளலாம். இந்த அட்டைகளை மெட்ரோ வாகன நிறுத்தம் வசதிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே சிங்கார சென்னை அட்டைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ஓங்கோ ரைடு அட்டைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.