பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-ஆவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை - சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்படவுள்ளது. சுமாா் ரூ.187 கோடி செலவில் இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 17 கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், மெட்ரோ ரயில் பழுதுபாா்க்கும் இடம், தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் மையம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்படவுள்ளன. இதில் சோதனை ஓட்டத்துக்கு தேவையான 820 மீட்டா் தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இந்தப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.