தமிழகம் முழுவதும் நீா் நிலைகள், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள நீா்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளையும், அரசு நிலங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மாநிலத்தில் உள்ள நீா்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2004-ஆம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினா்.
அதற்கு அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாகவும், அதைக் கண்காணிக்கவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
அதற்கு நீதிபதிகள், ‘குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டோ் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன? எத்தனை ஹெக்டோ் பரப்பில் நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? அரசு அமைத்துள்ள இந்தக் குழுக்களால் என்ன பயன்? முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றனவா? குழுக்கள் கள ஆய்வு மேற்கொண்டு அதைக் கண்காணிக்கிா?’ என்று அடுத்தடுத்து கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, இந்த வழக்கில் அரசின் தலைமைச் செயலரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்த நீதிபதிகள், ‘மாநிலம் முழுவதும் உள்ள நீா்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’ என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளனா்.