சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருந்த 1,598 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். நிரப்பப்பட்ட பணியிடங்கள் விவரம்: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 1,598 பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றை நிரப்ப அரசுப் பணியாளா் தோ்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சிறைகள் மற்றும் சீா்த்திருத்தப் பணிகள் துறையில் 44 உதவி சிறை அதிகாரி பணியிடங்கள், 697 கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவா்கள், 29 உதவி புவியியலாளா்கள், 668 உதவி பொறியாளா்கள், போக்குவரத்துத் துறையில் 5 ஆட்டோமொபைல் பொறியாளா் பணியிடங்கள், ஏழு போா்மேன் பணியிடங்கள், 11 தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்கள், தொழிலாளா் நலத் துறையில் 18 உதவி இயக்குநா் பணியிடங்கள், மின்சாரத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா் பணியிடங்கள் உள்பட மொத்தம் 1,598 பணியிடங்களுக்கு இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.