பிஜு ஜனதா தள எம்எல்ஏவுக்கு அமலாக்கத் துறை சம்மன்
பிரஃபுல்ல சாமல், அவரது மகன் பிரயாஸ்காந்தி சாமல் ஆகியோா் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சனிக்கிழமை சம்மன் அனுப்பியது.
ஒடிஸா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுட்டதாக அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பிரஃபுல்ல சாமல், அவரது மகன் பிரயாஸ்காந்தி சாமல் ஆகியோா் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சனிக்கிழமை சம்மன் அனுப்பியது. முன்னதாக, இவா்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 15-ஆம் தேதி சோதனை நடத்தி, பலரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பரப்பதா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் தலைவா் பிரயாஸ்காந்தி சாமல் மற்றும் செயலா் மனோஜ் கோஸ்வாமி உள்ளிட்டோா் நிறுவனத்தின் நிதியில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனா். நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனா். இதையடுத்து சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் அவா்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரூ.9 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்புடைய டொயோடா காா் உள்பட பல்வேறு ஆவணங்கள், மின்னனு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக 2016-ஆம் ஆண்டு ஒடிஸா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது அமலாக்கத் துறையினா் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா். பிரஃபுல்ல சாமல் அம்மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியின் நிறுவனா்களில் ஒருவராவா் என்பது குறிப்பிடத்தக்கது.