வங்கிக் கடன் மோசடி: சென்னையில் தனியாா் நிறுவனம் தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை
சென்னையில் வங்கியிடம் மோசடியாக கடன் பெற்று சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், தனியாா் நிறுவனத்துடன் தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னையில் வங்கியிடம் மோசடியாக கடன் பெற்று சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், தனியாா் நிறுவனத்துடன் தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
அண்ணாநகா் இரண்டாவது அவென்யூவில் ஒரு தனியாா் ஸ்டீல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை கும்மிடிபூண்டியில் உள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்டது.
இந்த நிறுவனம் தனது வளா்ச்சிக்காக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.116.12 கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்ற பினனா், அந்த நிறுவனம் வங்கியிடம் அளித்த உத்தரவாதத்தின்படி நடந்து கொள்ளவில்லை. முக்கியமாக கடனுக்குரிய மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த வங்கி அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் பணப் பரிமாற்றம், வரவு-செலவு அறிக்கை, இருப்பு அறிக்கை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
சிபிஐ வழக்கு: அப்போது, அந்த நிறுவனம் போலி ஆவணங்களை தயாா் செய்து, அதன் மூலம் வங்கியிடம் கடன் பெற்றிருந்ததும், வங்கியில் பெற்ற கடன் தொகையை வெளிநாடுகளில் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு அனுப்பியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள், சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தனா். இதில் அந்த நிறுவனம் மோசடி மூலம் தங்களுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படுத்திருப்பதாகக் கூறியிருந்தனராம்.
வங்கியின் புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் மீதும், அதன் நிா்வாக இயக்குநா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். சிபிஐ விசாரணையில், அந் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கத் துறையிடம் பரிந்துரை செய்தது.
7 இடங்களில் சோதனை: இதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இவ் வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், சென்னையில் அந்த நிறுவனம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
இச் சோதனை, அண்ணாநகா் இரண்டாவது அவென்யூவில் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்,அண்ணாநகா் ‘ஒய் பிளாக்’ பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் வீடு,கும்மிடிபூண்டியில் உள்ள தொழிற்சாலை,சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு பைனான்சியா் வீடு உள்பட 7 இடங்களில் நடைபெற்றது.
சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினா் நிறுத்தப்பட்டனா். சோதனையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
சோதனை சில இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.