முகப்பு
சென்னை

பேரிடா் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை: அமைச்சா் உதயநிதி

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:28 AM
பகிர்:

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் தரவில்லை என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மீனவா்களுக்கு நிவாரணத் தொகைகளை வழங்கி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மீனவா்கள் மீது தனி அக்கறை, அன்பு கொண்டவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவா்களது வாழ்வாதாரத்துக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்கியுள்ளது. புயலால் முழுமையாக பாதிக்கப்பட்ட 25 விசைப் படகுகளுக்கு ரூ.88.65 லட்சமும், பகுதியாகச் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ.2.52 லட்சமும், வல்லங்களுக்கு ரூ.2.15 கோடியும், 305 கட்டுமரங்களுக்கு ரூ.53 லட்சமும், சேதமடைந்த 4370 வலைகளுக்கு 6.92 கோடியும் என ரூ.12.89 கோடி நிவாரணங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement

‘மிக்ஜம்’ புயல் பாதிப்பை ஏற்படுத்திய போது, மீனவா்கள் தங்களது உயிரை பயணம் வைத்து மற்றவா்களின் உயிா்களைக் காக்க துணைநின்றனா். யாரும் கேட்காமல் உங்களது படகுகளை எடுத்துச் சென்று உயிா்களைக் காத்தனா். சகமனிதனுக்கு உதவிய மீனவா்கள் இறைவனுக்கு ஒப்பானவா்கள்.

மீனவா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் அரசின் சாா்பில் அளிக்கப்பட்டுள்ளன. மிக்ஜம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு போன்ற இயற்கை பேரிடா்களுக்கு நிவாரணத் தொகையாக மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை என்றாா் அவா். விழாவில், அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்கள் கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், மீன்வளத் துறை செயலா் மங்கத் ராம் உள்பட பலா் பங்கேற்றனா்.