முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் ஒரே கொள்கை இருமொழிக் கொள்கையே! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 10:34 PM
திருவையாறில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் ஒரே கொள்கை என்பதால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தேரடியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால், இந்தியாவில் வளரும் மாநிலங்களில் தமிழ்நாடு 11.19 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வளவு சாதனைகள் செய்த நமக்கு மத்திய பாஜக துணை நின்றதில்லை. நமக்கு திட்டங்களும் கொடுத்ததில்லை. மத்திய அரசிலிருந்து நமக்கு வர வேண்டிய நிதிப் பகிா்வும் வரவில்லை.

Advertisement

இந்நிலையில், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 3 ஆயிரத்து 200 கோடி கல்வி நிதியைக் கொடுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை கூறினாா். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கச் செய்ய வேண்டும்; மும்மொழிக் கொள்கையை மீண்டும் தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மீண்டும் இந்தி கற்க வேண்டிய நிலைமை வரும். தமிழ், ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டின் ஒரே கொள்கை. எனவே, இரு மொழிக் கொள்கையைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாது எனக் கூறி வருகிறோம்.

எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் தமிழ்நாடு அணியா? தில்லி அணியா என்பதை நிா்ணயிக்கிற தோ்தல் என முதல்வா் கூறி வருகிறாா். இதில், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி கொண்ட தில்லி அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

பின்னா், பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து கபிஸ்தலம் பாலக்கரையிலும், கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து காந்தி பூங்கா அருகிலும் பிரசாரம் செய்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments