முகப்பு
சென்னை

பாரீஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு

சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டு ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

Updated On : 1 மார்ச், 2024 at 2:03 AM
பகிர்:

சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டு ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஏா் பிரான்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் தினமும், பாரிஸில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் மறுமாா்கமாக அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் செல்லும். இதன்படி, பாரீஸிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய இந்த விமானம், மறுமாா்க்கமாக நள்ளிரவில் மீண்டும் 324 பயணிகளுடன் பாரீஸ் புறப்படத் தயாராகி ஓடுபாதையில் இயங்கத் தொடங்கியது. அப்போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா். இதையடுத்து விமானத்தின் இயக்கத்தை நிறுத்திய விமானி, இதுகுறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து இழுவை வாகனம் வரவழைக்கப்பட்டு விமானம் நிறுத்துமிட பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பப் பொறியாளா்கள் விமானத்தை பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், நீண்ட நேரமாகியும் விமானம் பழுது சரிசெய்யப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்விமானம் வெள்ளிக்கிழமை காலை பாரீஸுக்கு புறப்பட்டுச் செல்லும் எனவும் விமானநிறுவனம் அறிவித்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். எனினும், சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.