முகப்பு
தமிழ்நாடு

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் ஏர் இந்தியா விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சுவாரசிய நிகழ்வு

Updated On : 11 ஏப்ரல் 2026, 11:27 am IST
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் - கோப்பிலிருந்து - DPS
பகிர்:

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னையில் திடீரென மழை பெய்ததால், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னை வர முடியாமல், பெங்களூரு திருப்பி விடப்பட்ட நிலையில், அதிலிருந்து கிட்டத்தட்ட 3.25 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திட்டமிட்டபடி விமானம் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக சென்னை வந்து, மும்பை சென்றிருந்தால், அது கடத்தல்காரர்களின் கையில் பத்திரமாக சென்று சேர்ந்திருக்கும் என்கிறார்கள் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள்.

Advertisement

Advertisement

இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஏர் இந்தியா விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு முற்பகல் 11.25 மணிக்கு வந்தடையும். சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும். ஏப். 6ஆம் தேதி திங்களன்று சென்னையில் திடீரென மழை பெய்ததால், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டது. பிறகு அங்கிருந்து தாமதமாக சென்னைக்கு வந்தது. ஆனால், அதே வேளையில், மாற்று விமானம் ஒன்று சென்னையிலிருந்து மும்பைக்கு பயணிகளுடன் புறப்பட்டுவிட்டது.

பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்ட விமானம் அன்று மாலை 3.40 மணிக்கு சென்னை வந்தது. அப்போது விமானத்தை சுத்தம் செய்தபோது, அதில் 18 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. இதனை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இது தொடர்பான விசாரணையில்தான் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிபட்டது. அதாவது, சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு இந்த தங்கம் கடத்திவரப்படவில்லை. அவ்வாறு வந்திருந்தால் மறைத்துக் கொண்டு வரப்படும். பேஸ்ட், அல்லது பவுடராக சுங்கத் துறையிடம் சிக்காத வகையில் மாற்றப்பட்டிருக்கும். ஆனால், கடத்தல்காரர்கள் இதனை மும்பைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதாவது, சர்வதேச விமானம் ஒன்று உள்நாட்டில் இரண்டு இடங்களில் தரையிறங்கும்போது, ஒருவர் சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில் வைத்துவிடுவார். சென்னையில் அதனை விமானத்திலேயே வைத்துவிட்டு அவர் இறங்கிவிடுவார். அவர் சுங்கத் துறையின் சோதனைக்கு உள்படுத்தப்படுவார். அதே வேளையில் சென்னையிலிருந்து வரும் மற்றொருவர், அதே விமானத்தில் ஏறி தங்கத்தைக் கடத்திக் கொண்டு உள்ளூர் விமானி என்பதால் சுங்கத் துறை சோதனைக்கு உள்படுத்தப்படாமல் மும்பையில் இறங்கிவிடுவார் என்று கடத்தல்காரர்களின் நுட்பமான கடத்தல் முறையைக் கண்டறிந்துள்ளனர்.

summary

Interesting incident 2 kg of gold seized from Air India flight due to rain in Chennai on April 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.