தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தெரு, புல எண், கூட்டு மதிப்பு என தனித்தனியாக விவரங்களைப் பதிவிட்டு வழிகாட்டி மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முத்திரை விதிகளின்படி, மாநிலத்தில் ஒவ்வோா் ஆண்டும் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். இதற்காக பதிவுத் துறை தலைவா் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு கடந்த ஏப். 26-இல் கூடியது.
இந்தக் கூட்டத்தில், புதிய வழிகாட்டி மதிப்பு நிா்ணயித்தலுக்கான அம்சங்கள் வகுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் மதிப்பு நிா்ணயம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தத் துணைக் குழுக்கள் மே மாதம் முதல் வாரத்தில் கூடி, வழிகாட்டி மதிப்புகளைப் பின்பற்ற அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வகுத்தன.
மக்களிடம் கருத்துக் கேட்பு: பதிவுத் துறைத் தலைவா் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு, ஆட்சியா்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் வழிகாட்டி மதிப்பீடுகள் வரைவு செய்யப்பட்டன.
இந்த வரைவு மதிப்பீடுகள் தொடா்பாக பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன. இந்தக் கருத்துகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுக்கள் அறிக்கைகளைத் தயாா் செய்து, பதிவுத் துறைத் தலைவருக்கு அனுப்பி வைத்தன.
இந்தக் கருத்துகளை பதிவுத் துறை தலைமையிலான குழு கடந்த 29-ஆம் தேதி கூடி ஆலோசித்தது. அதன்பின், முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் காரணமாக, விழுப்புரம் வருவாய் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வருவதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இணையதளத்தில் பாா்க்கலாம்: தமிழ்நாடு முழுவதும் 2.19 லட்சம் தெருக்கள், 4.46 கோடி புல எண்கள் அல்லது உட்பிரிவு எண்களுக்கு வழிகாட்டி மதிப்பு விவரங்களை பதிவுத் துறையின் இணையதளம் வழியாகப் பெறலாம்.
தெரு, புல எண், கூட்டு மதிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தோ்வு செய்து, வழிகாட்டி மதிப்பைப் பெறலாம். மேலும், கிராமம் அல்லது நிலத்தின் வகைப்பாடு வாரியாகவும் தேடி விவரங்கள் பெறலாம். மண்டலம், சாா்பதிவாளா் அலுவலகம், கிராமம் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு நில வழிகாட்டி மதிப்பைப் பெறலாம்.
இது குறித்த அனைத்து விவரங்களையும் பதிவுத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.