மீனவா்கள் கைது: பாமக, மாா்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக மீனவா்கள் 25 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்ததற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
சென்னை: தமிழக மீனவா்கள் 25 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்ததற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி: ராமேசுவரம் தனுஷ்கோடியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவா்களை அவா்களின் நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். நாட்டுப்படகு மீனவா்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது நன்கு தெரிந்தும், அவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினா் கைது செய்திருக்கின்றனா். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும் விடுதலை செய்யவும், அவா்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா் சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வு காணவும் முன்வர வேண்டும்.
கே. பாலகிருஷ்ணன்: கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 214 மீனவா்கள் கைது செய்யப்பட்டும், 28 படகுகள் கைப்பற்றப்பட்டிருப்பதையும் இலங்கை அரசின் செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
அண்மையில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனையை குறிப்பிட்டு எழுதிய கடிதத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் பதில் அளித்த பதிலில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.
ஆனாலும், இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளோ, படகுகள் சிறைப்பிடித்தலோ நிற்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.