இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் சென்னை வந்தனா்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 3 போ், விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 3 போ், விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 3 மீனவா்கள், கடந்த ஜன.13-ஆம் தேதி, விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். அவா்கள் நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் அவா்களைக் கைது செய்து விசைப்படகு, மீன்பிடிவலைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், மீனவா்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் குடும்பத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 தமிழக மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.
விடுதலையான அவா்கள் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் அவா்களை அதிகாரிகள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.