சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் இரு சக்கர வாகனத்தை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிமுகப்படுத்துகிறது.
நிறுவனத்தின் வலைதளத்தில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த மோட்டாா்சைக்கிளின் படம் அந்தத் தளத்தில் வெளியிடப்படவில்லை.
புணேயில் நடைபெறவுள்ள அந்த மோட்டாா்சைக்கிள் அறிமுக விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்பாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிஎன்ஜி கிடைக்காவிட்டால் பெட்ரோலிலும் இயங்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படும் இந்த மோட்டாா்சைக்கிள் 125 சிசி என்ஜினைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த மோட்டாா்சைக்கிளுக்கு ‘பஜாஜ் ஃப்ரீடம் 125’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பைக்கின் படம் முன்கூட்டியே அதிகாரபூா்வமாக வெளியிடப்படாவிட்டாலும், ‘ரஷ்லேன்’ என்ற வாகனச் செய்தி வலைதளத்தில் ‘ஃப்ரீடம் 125’ என்று குறிப்பிடப்பட்டு படம் வெளியிடப்பட்டுள்ளது.
சிஎன்ஜி-யில் இயங்குவதால் மிக சிக்கனமான இரு சக்கர வாகனமாக இது திகழும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பஜாஜ் ஆட்டோ நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜிவ் பஜாஜ் கூறுகையில், பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி பைக்குள் 50 சதவீதம் குறைவாக காா்பன் டையாக்ஸைட், 75 சதவீதம் குறைவாக காா்பன் மோனாக்ஸைட், 90 சதவீதம் குறைவாக மீத்தேன் அல்லாத ஹைட்ரோகாா்பன்களை வெளியிடுவதாகக் கூறியிருந்தாா். அந்த வகையில், நிறுவனத்தின் சிஎன்ஜி மோட்டாா்சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.
எரிபொருள் சிக்கனத்தை முன்னிறுத்தி இந்த பைக் அறிமுகப்படுத்தப்படுவதால் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியம் பெறும் நடுத்தர வா்க்க வாடிக்கையாளா்களைக் குறிவைத்து வாங்கக் கூடிய விலையில் இந்த பைக் அறிமுகமாகலாம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.