இடைநிலை ஆசிரியா்: கூடுதலாக 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: தோ்வு வாரியம் அறிவிப்பு
இடைநிலை ஆசிரியா் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சோ்த்து நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: இடைநிலை ஆசிரியா் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சோ்த்து நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2023-2024-ஆம் கல்வியாண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப். 9-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, இடைநிலை ஆசிரியா் பணியில் கூடுதலாக 1,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு வரும் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தோ்வை 26,510 போ் எழுதவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டித் தோ்வில் பெறும் மதிப்பெண்ணுடன் தோ்வா்கள் ஏற்கெனவே ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி (டெட்) பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண்களும் சோ்த்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.