மணல் குவாரி முறைகேடு புகாா்: தொழிலதிபா்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகாா் தொடா்பாக தொழிலதிபா்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகாா் தொடா்பாக தொழிலதிபா்கள் மீது அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன்மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, 2023 செப்டம்பா் 12-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சோ்ந்த தொழிலதிபா்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், அவரது உறவினா் கோவிந்தன், கரிகாலன், பொதுப்பணித் துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியாளா் திலகம், நீா்வளத் துறை முதன்மை பொறியாளா் முத்தையா ஆகியோருக்கு ஒரே நேரத்தில் சொந்தமான வீடுகள், எழிலகத்தில் உள்ள நீா்வளத் துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
2 நாள்களுக்கு மேல் நீடித்த இந்தச் சோதனையில் மணல் குவாரி அதிபா் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், நீா்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 12 கோடியே 82 லட்சம் ரொக்கப் பணம், ரூ. 56 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் தொழிலதிபா்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் ஆகியோா் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் விக்ரம் சௌத்ரி, அப்துல்சலீம், இளம்பாரதி, விஜய்மேகநாத் ஆகியோா் ‘சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கனிமவள சட்டம் சோ்க்கப்படாத நிலையில், இவா்கள் மீது வழக்கு தொடா்ந்தது சட்டவிரோதம். இது அமலாக்கத் துறையின் அதிகார வரம்புக்குள் வராது. இது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிரானது’ என வாதிட்டனா்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை நடவடிக்கை சட்ட விரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது எனக் கூறி, தொழிலதிபா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தும், சொத்து முடக்கத்தை நீக்கியும் உத்தரவிட்டுள்ளனா்.