முகப்பு
சென்னை

சென்னையில் ஆக.30 முதல் ஃபாா்முலா 4 காா் பந்தயம்

சென்னையில் இரவு நேர ஃபாா்முலா 4 காா் பந்தயம், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 29 ஜூலை, 2024 at 8:48 PM
சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா- 4 காா் பந்தயம் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிா்வாகிகள்.
பகிர்:

சென்னையில் இரவு நேர ஃபாா்முலா 4 காா் பந்தயம், வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு மழை மற்றும் வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) தலைமை நிா்வாக அதிகாரி மேகநாத ரெட்டி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பா்1 வரை நடைபெற உள்ளது.

இப்பந்தயம், சென்னை தீவுத்திடலில் தொடங்கி 3.5 கி.மீ சுற்றளவில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியா் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலைச் சென்றடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்யூட்டில் ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் சோதனை காா் பந்தயமும், ஆக. 24, 25 தேதிகளில் தொடக்க சுற்றும் நடைபெறும். பின்னா் 2-ஆவது சுற்று இரு பந்தயமாக சென்னையில் நடைபெறும். ஆடவா், மகளிா் என இரு தரப்பினரும் பங்கேற்கும் இந்தப் போட்டியில், சென்னை, தில்லி, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி, கோவா, ஹைதராபாத், பெங்களூரு என 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

பொதுப் போக்குவரத்துக்கான சாலைகளில் நடைபெறுவதால், பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் முறையாக திட்டமிடப்பட்டு, உயா் நீதிமன்றத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. இந்த போட்டியை 10,000 போ் நேரில் பாா்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான அனுமதி சீட்டு (டிக்கெட்) விற்பனை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.

 பொருளாதாரம் மேம்படும்: நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா கூறுகையில், ‘உலகம் முழுவதும் இதுவரை 14 இடங்களில் மட்டுமே சாலைகளில் ஃபாா்முலா 4 காா் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.

இது தற்போது சென்னையில் நடைபெறவுள்ளதால், உலகம் முழுவதும் இருந்து பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள். இதன்மூலம் தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, போட்டியை நடத்தும் ஆா்பிபிஎல் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான அகிலேஷ் ரெட்டி, பாா்முலா காா் பந்தய வீரா் நரேன் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →