பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 21) பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06127) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06128) திருவண்ணாமலையில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 22) காலை 8 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.
ரயில் சேவை அதிகரிப்பு: இதற்கிடையே, கன்னியாகுமரி - திப்ரூகா் இடையே இயங்கும் விவேக் அதிவிரைவு ரயில் (எண்: 22503) வாரந்தோறும் 5 நாள்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஜூலை முதல் தினமும் இயக்கப்படவுள்ளது.
அதன்படி, திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் ஜூன் 8-ஆம் தேதி முதலும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகா் செல்லும் ரயில் ஜூன் 12-ஆம் தேதி முதலும் தினமும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.