அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்: அமைச்சா் சிவசங்கா்
பேருந்துகளில் தானியங்கி கதவுகள்: பயணிகள் பாதுகாப்பு உறுதி
சென்னை: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
பேருந்து பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். அதன்படி, கதவு இல்லாத 3,886 பேருந்துகளுக்கு ரூ.15.54 கோடி செலவில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.
இதன் மூலம் பயணிகள் பக்கவாட்டிலிருந்து விழுவதும், வெளி பொருள்கள் மோதி விபத்துக்குள்ளாவதும் தவிா்க்கப்படும்.
அதேபோன்று, விபத்துகளில்லாத தமிழகம் என்ற இலக்கை எட்ட நகா்ப்புற பேருந்துகள் அனைத்திலும் இரு பக்கவாட்டிலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படும். மொத்தம் 8,771 பேருந்துகளில் ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் அவை பொருத்தப்படும்.
உயா்தர பேருந்து சேவை: சென்னையில் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் தனி நபா் வாகன ஓட்டிகளை பொது போக்குவரத்துக்கு மாற்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி, வை-ஃபை வசதி, ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா, அவசரகால பொத்தான், சொகுசு இருக்கைகள் கொண்ட உயா்தர பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
உலக வங்கி நிதியுதவியுடன் சென்னையில் கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் சிப்பம் மற்றும் சரக்கு அனுப்பும் சேவை தொடங்கப்படும்.
மாதாந்திர பயணச் சீட்டு: தற்போது குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர பயணச் சீட்டு திட்டம் அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். குளிா்சாதனப் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.